வவுனியாவில் ஊழியர்களிற்கு சிங்கள மொழித் திணிப்பு! மக்கள் விசனம்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் கடமை நேரத்தில் ஊழியர்களுக்கு சிங்கள வகுப்புகள் நடைபெறுவதாக அறியகிடைத்துள்ளது.

இதன்காரணமாக தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மும்மொழி கொள்கை செயற்றிடத்தில் கீழ் பிரதேசசபையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிங்கள வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த சிங்கள வகுப்பு பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் மாலை 3.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை இடம்பெறுவதினால் பொதுமக்கள் பிரதேசசபையின் சேவைகளை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பிரதேச சபை ஊழியர்களுக்கான சிங்கள வகுப்பினை ஊழியர்களின் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்திலோ அல்லது சனி, ஞாயிறு தினங்களிலோ மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரதேச சபையின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு நேற்றையதினம் பல பொதுமக்கள் பிரதேசசபைக்கு சென்றிருந்த போதிலும் ஊழியர்கள் தற்போது சிங்கள வகுப்பில் உள்ளதாக தெரிவித்து பொதுமக்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் சிங்கள வகுப்பு உள்ளதால் திங்கட்கிழமை வந்து சேவையினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பிரதேச சபையின் ஊழியரோருவர் தெரிவித்திருந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.