கோத்தபாய போன்ற ஒருவர் எந்த நாட்டிலும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டதில்லை! -ரஞ்சன்

கோத்தபாய ராஜபக்ஷ அளவுக்கு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஒருவர் உலகில் எந்த நாட்டிலும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டதில்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் அவருக்கு எதிராக பெருமளவான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பவற்றை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டுள்ளார். அது சம்பந்தமான விசாரணை நடைபெற்று வருகிறது.

அத்துடன் 2005ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் மோசடியான முறையில் கோத்தபாயவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தியுள்ள ரஞ்சன் ராமநாயக்க, அமெரிக்க பிரஜையான அவரது பெயர் எப்படி 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் ரஞ்சன் ராமநாயக்க இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.