இன்னும் தீவிரவாதிகள் நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.! –சரத் பொன்சேகா

தீவிரவாத பயிற்சிகளைப் பெற்ற பலர் இன்றும் சுதந்திரமாகத் சுற்றித் திரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான பலமான சட்டக்கட்டமைப்பொன்று இலங்கையில் இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டமை தொடர்பாகவும் நான் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். அதாவது, நாட்டில் சீரான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அவசரக் காலச்சட்டமொன்று தேவையில்லை.

எனினும், என்னைப் பொறுத்தவரை இன்னும் அனைத்துத் தீவிரவாதிகளும் கைது செய்யப்படவில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன். தொடர்ந்தும் தீவிரவாதத்துடன் தொடர்புடையோர் கைது செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனவே, நான் கூறியதை மக்கள் நிச்சயமாக எதிர்க்காலத்தில் தெரிந்துக் கொள்வார்கள். தீவிரவாத பயிற்சிகளைப் பெற்ற பலர் இன்றும் சுதந்திரமாகத் தான் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிராக விரிவானதும் பலமிக்கதுமான சட்டக்கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபித்தே ஆகவேண்டும். ஒருவரை கைது செய்து, அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்னொருவரை கைது செய்யும் நடவடிக்கை எல்லாம், இந்த விடயத்தில் செல்லுபடியாகாது.

எனவே, இதற்கு இஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டே ஆகவேண்டும். எனினும், இலங்கையில் அவ்வாறானதொரு பலமான கட்டமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எனக்கு இதுவரை தெரியவில்லை.

அத்தோடு, நாம் தெரிவுக்குழுவில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சாட்சியங்களை தற்போது பெற்று வருகிறோம். இதற்கு ஜனாதிபதியையும் விரைவில் அழைத்து சாட்சிகளைப் பெற்றுக்கொண்டவுடன் இதன் செயற்பாடுகள் நிறைவடையும்.

ஒருவேளை ஜனாதிபதி இதற்கு சமூகமளிக்காத பட்சத்தில், இதனையும் குறிப்பிட்டுத்தான் நாம் எமது இறுது அறிக்கையை தயாரிப்போம். எவ்வாறாயினும், அவர் சமூகமளிப்பதுதான் அவருக்கு சிறப்பாக அமையும்.” என கூறினார்.