வெளிப்படும் ஜனாதிபதி மைத்திரியின் உண்மை முகம்!

 
போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தமை ஊடாக ஜனாதிபதி தமது உண்மை முகத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக முன்னர் கடமையாற்றியவன் என்ற ரீதியில் நான் இன்று வெட்கப்படுகின்றேன். இவ்வாறான இனவாதிகளுடன் நான் பயணித்திருக்கின்றேன் என்று நினைக்கும்போது நான் கவலையடைகின்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தமிழ் மக்கள் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இந்த நாட்டில் கடந்தகாலத்தில் நிலவிய மோசமான ஆட்சி அதிகாரத்தினை துடைத்தெறிவதற்கு பெரும் பங்களிப்பினை தமிழ் மக்கள் வழங்கினர்.

ஆனால், தமிழ் மக்கள் எதிர்பார்க்காத தமிழ் மக்களுக்கு விரோதமான நடைமுறைகளையே ஜனாதிபதி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அந்த கட்சியில் பயணித்தவன் என்ற அடிப்படையில் நான் வேதனைப்படுகின்றேன். இன்று சுதந்திரக் கட்சியில் உள்ள ஏனைய தமிழ் அமைப்பாளர்களுக்கும் இது செய்தியாகவே நான் பார்க்கின்றேன்.

இந்த நாட்டில் யாருக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு தமது ஆதரவுகளை வழங்கினார்களோ அவர்களை பாதுகாக்கும் பணியையே ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார்.

அதன்கீழ் தமிழ் மக்கள் யாரை மாற்ற வேண்டும் என்று 2015ஆம் ஆண்டு வாக்களித்து ஜனாதிபதியாக்கினார்களோ அவரே சிறுபான்மை மக்களால் புறக்கணிக்கப்பட்டவரை 2018ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தனித்தார்.

இவ்வாறு அண்மைக்காலமாக ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறுப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களினால் வெறுக்கப்படுபவராக கருதப்படும் போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் தெரிவிக்கப்படும் சவேந்திர சில்வாவினை இராணுவத்தளபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி தனது உண்மை முகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் பெரும்பான்மையின கட்சிகள் ஓருபோதும் சிறுபான்மை இனத்தினை அரவணைத்து செல்லாத உண்மையினை உணர்ந்தவன் என்ற அடிப்படையில் தற்போது பெரும்பான்மையின கட்சிகளுடன் உள்ளவர்கள் அதில் இருந்து வெளியேறி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.