புத்தளம் வர்த்தகர் கடத்தப்பட்டுக் கொலை: ஒருவர் கைது!

புத்தளம் பகுதியில் வர்த்தகர் ஒருவரைக் கடத்தி கொலை செய்து சடலத்தை புதைத்தமை தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் சி.சி.ரி.வி காணொளிகள் ஊடாக  விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் முனனெடுத்தனர். இதனடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில்  ஒருவர்  கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காணாமல் போனதாகக்  கூறப்பட்ட வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து  சந்தேக நபர் வர்த்தகரின் சடலத்தை புத்தளம் – புழுதிவாசல் பகுதியில் தென்னை தோப்பு ஒன்றில் புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் பொலிஸார் வியாழக்கிழமை புத்தளம் நீதிவான் முன்னிலையில்  வர்த்தகரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான  36 வயதான , ஏ.ஆர்.எம்.சபிஸ் எனப்படும் இரு பிள்ளைகளின் தந்தையே  கொலை செய்யப்பட்டவராவார்.   புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.