அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தின் தற்போதைய நிலை!!

அவுஸ்திரேலியாவில் இருந்து நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கை கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டு டார்வினில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடுகத்தலை எதிர்நோக்கியுள்ள பிரியா அந்த ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.

“தனது இரு பிள்ளைகளும் மிகவும் சோர்வாகவும், மனதால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது டார்வினிலுள்ள விமான நிலையப்பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளோம்.

நாங்கள் இந்த நாட்டில் வாழவேண்டும் என தெரிவித்து எங்களுக்காக போராடும் அவுஸ்திரேலிய மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளோம்.

இந்நிலையில், நாங்கள் இந்த நாட்டில் தொடர்ந்தும் வசிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும், இந்தக் குடும்பம் எதிர்வரும் புதன்கிழமை வரை அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக” தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மெல்பேர்னில் சுமார் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் நேற்று சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

எனினும், நடேசலிங்கம் பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.