புலிகளுக்கு எதிராகவே போரிட்டேன் தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல - சவேந்திர சில்வா

விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே தான் போரிட்டதாகவும் தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல எனவும் தெரிவித்துள்ள இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா, சகல இலங்கையர்களின் பாதுகாப்புக்காக செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் முப்படை தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என் மீது நம்பிக்கை வைத்துள்ளார். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தி, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவேன்.

பல நபர்கள், பல்வேறு நாடுகள், சர்வதேச அமைப்புகள் எனக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன. நான் சாதாரண தமிழ் மக்களுடன் போரிட வில்லை. பயங்கரவாதிகளுடன் போரிட்டால், அந்த குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் தளர்ந்து போகாது செயற்படுவேன் எனவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ள உலகில் பல நாடுகளை சேர்ந்த இராணுவ பிரதானிகள், ராஜதந்திர அதிகாரிகள், மாநாட்டுக்கு இடையில், புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் நடந்த இறுதிக்கட்ட போரின் போது, சவேந்திர சில்வா கட்டளை அதிகாரியாக பணியாற்றிய இராணுவப் படைப் பிரிவின் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி, போர் குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. அந்த குற்றச்சாட்டுக்களுக்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவை கூறியுள்ளன.