மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க முயற்சி? இலங்கையில் அடுத்து நடக்கப்போவது என்ன?

yazhnews
இலங்கையில் நடைபெறப்போகும் தேர்தல்களுக்காக புதிய புதிய களமுனைகளை திறக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காவே செயற்கையான சூழ்நிலை சம்பவங்களை உருவாக்கி அதன் அடிப்படையில் தனக்கான ஆதரவு தளத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையிலே இராணுவ தளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளை மீள உருவாக்கும் திட்டம்!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பல தடவைகள் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சில முன்னாள் போராளிகளை இராணுவம் சுட்டும் கொன்றுள்ளது.

சாவகச்சேரியில் கிளைமோர் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் உட்பட நாட்டில் விடுதலைப் புலிகளுடன் முடிச்சுப் போடப்பட்ட பல சம்பவங்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்றே கூறப்படுகிறது.

தமிழ் மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் தமிழர் தாயகத்தில் இராணுவத்தை தக்க வைப்பது பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருத்தல் இராணுவத்திற்கு அதிகாரத்தை வழங்குதல் கொலை கொள்ளை காணாமல் போதல் உள்ளிட்ட போர்க் குற்றங்களை செய்த இராணுவ புலனாய்வு அதிகாரிகளை விடுதலை செய்யும் நோக்குடனே இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்க நிகழ்ச்சி நிரல்கள் இருந்துள்ளது.

இன்று மீண்டும் அதே பாணியிலான விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் இடம்பெறப் போகிறது.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம் தீவிரவாதம் குறித்து அதிக சிரத்தையுடன் செயற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் தற்போது மீண்டும் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி பளை வைத்தியசாலையின் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் என்ன என்பது எதிர்வரும் காலங்களில் விஸ்வரூபம் எடுக்கப்போகும் கைதுகள் மற்றும் சம்பவங்களை வைத்து உணர முடியும்.

இவை அனைத்தும் தற்போது அவசர அவசரமாக நடைபெறப்போவது கோத்தபாய ராஜபக்ச அவர்களின் தேர்தல் வெற்றிக்காவே அதாவது கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு இராணுவ புலனாய்வு துறை உட்பட அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் களத்தில் இறக்கிவிடப் பட்டுள்ளனர்.

இதனால் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் என்று கூறி பலர் கைது செய்யப்பட வாய்ப்புகள் உண்டு.

அதே போன்று சகரான்களின் சம்பவங்களும் இலங்கையில் ஆங்காங்கே நடைபெற வாய்ப்புகள் உண்டு. இதன் ஊடாக இனவாதத்தை தூண்டி அச்சத்தில் நாட்டை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்தி வெற்றி பெறலாம் என்று மகிந்த ராஜபக்ச தரப்பு கருதுகிறது.

இதற்காக இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள் இலங்கைக்குள் வந்துள்ளதான கதைகளை புலனாய்வு துறையிர் கட்டிவிட்டுள்ளனர்.

ஆபத்தில் முன்னாள் போராளிகள்?

இலங்கையில் உள்ள கருணா உட்பட முக்கிய புள்ளிகள் கொலை செய்ய இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் வந்துள்ளதாக புலனாய்வு துறை புரளியை கிளறிவிட்டு தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது இந்த தகவலின் பின்னணியில் இலங்கை பாதுகாப்பு தரப்பின் நிகழ்ச்சி நிரல் ஒன்று உண்டு அதற்காக பலபேர் கைது செய்யப்பட வாய்ப்புகள் உண்டு.

அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் யாரையும் எந்த பாதுகாப்பு பிவினரும் கைது செய்யலாம் என்ற அடிப்படையில் முன்னாள் போராளிகள் மற்றும் அடிக்கடி இந்தியா சென்று வரும் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் இன உணர்வார்கள் அனைவரும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

முன்னாள் போராளிகள் விரும்பியோ விரும்பாமலோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மீண்டும் உருவாக்கப்படுகிறது.

எனவே எதிர்வரும் காலம் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் இன உணர்வார்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்ட வேண்டியது காலம்.

ஏப்ரல் 21 உயிர்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எவ்வாறு இலங்கை முற்றும் முழுதாக பாதுகாப்பு தரப்பினரின் கைகளுக்கு சென்றதோ அதே போன்று எதிர்வரும் காலங்களில் இலங்கை நாடு முற்று முழுதாக பாதுகாப்பு தலைமைகளின் கைகளுக்கு செல்வதற்கான அதாவது பாதுகாப்பு தரப்பினர் தங்களது அதிகாரத்தை தக்க வைப்பதற்கான சம்பவங்கள் பல நடைபெறலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

இதற்கான ஆரம்பமே இராணுவத் தளபதி சவேந்திர டி சில்வா அவர்களின் நியமனம்.

#tamilwin