கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற வேன் விபத்தில் ஏழ்வர் காயம்!

புத்தளம் – அநுராதபுரம வீதியின் சாலியவெவ 19ஆம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்து உள்ளாகி நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை 4.45 மணியளவில் அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த லொறி ஒன்றின் பின்புறமாக இவர்கள் பயணித்த வேன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் உடனடியாக அவ்விடத்திலிருந்து சாலியவெவ பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து நொச்சியாகம வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

இவ்விபத்தில் பயணித்த நான்கு ஆண்களும் மூன்று பெண்களுமே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுள் சிறு பிள்ளை ஒன்றும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தினால் வேன் பலத்த சேதமடைந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் சாலியவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே. ஜீ. பி. பிரியதா்சன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-Metronews