வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – இராணுவ தளபதி சவேந்திர சில்வா அதிரடி முடிவு!

இராணுவத் தளபதியாக எனது நியமனம் குறித்து சர்வதேச நாடுகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வா, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. இப்போதுவரை முகாம்களை அகற்றும் எந்த தேவையும் வரவில்லை எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு கருத்தரங்கு குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கையில் இவற்றைக் கூறினார்.

அதேபோல் வடக்கின் அரசியல்வாதிகள் என்னைப்பற்றி முன்வைக்கும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடாகும். அது குறித்து எனக்கு எந்த கருத்துக்களையும் முன்வைக்க முடியாது.

நான் ஒரு இனத்துக்கு மட்டுமே இராணுவத் தளபதி அல்ல. இந்த நாட்டின் சிங்கள மக்களை போல தமிழர் முஸ்லிம்கள் என அனைவரும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் இலங்கை மக்கள். நான் இந்த நாட்டையும், நட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனது கடமையும் அதுவேயாகும்.

அத்துடன் நான் மாத்தளையில் பிறந்து வளந்தவன். அங்கு சிங்கள மக்கள் மட்டுமல்ல, மூவின மக்களும் வசிக்கின்றனர். நான் அவர்களுடன் வளர்ந்த காரணத்தினால் எனக்கு அனைத்து மக்களின் மனங்களையும் அறிந்துகொள்ள முடியும். நான் தமிழ் மக்களின் பாதுகாப்பையும் கட்டாய கடமையாக கருதியே செயற்படுகின்றேன்.

என்மீதான யுத்த குற்றச்சாட்டு என்பது நிருபணமாகாத கூற்றுக்கள் என்றே நினைகின்றேன். போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை. மன்னார் மனித புதைகுழியையும் போர்க்குற்றம் என்றே கூறினார்கள். ஆனால் ஆய்வுகளின் பின்னர் அது வேறு ஒரு காரணி என்பது உறுதியாகியது. அதேபோல் தான் இந்த போர்க்குற்றச்சாட்டுக்களும் மாற்று வடிவம் பெறலாம் என்றும் இதன்போது கூறினார்.