ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ள தமிழ் கட்சிகள்! தமிழர்களுக்கான ஏமாற்றமா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பிரிவான ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், மலையக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும் மற்றும் மலையக கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ். நகர விடுதி ஒன்றில் இன்று (22) காலை இடம்பெற்றது.

இதன்போது வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டு இதற்கான தீர்வை அடைவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச் சந்திப்பின் பின்னர் ஊடக சந்திப்பு ஒன்று நடாத்தப்பட்டது. இச் சந்திப்பின் போதே தாம் இணைந்து செயற்படுவது தொடர்பில் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவுத்துள்ளனர்.

இச் சந்திப்பில் மலையகத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் கே.வீ. குமார் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அதே போன்று வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அனந்தி சசிதரனுடன் நாங்கள் ஏற்கனவே பேசியிருக்கிற்றோம். இதனடிப்படையில் இன்றும் சந்தித்து பேசி உள்ளோம்.

எங்கள் மலையக முன்னேற்றக் கழகத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் உள்ளிட்ட கட்சிகள் பலவும் இணைந்துள்ளன. இதேபோல அனந்தி சசிதரனின் கட்சியுடனும் கொள்கையளவில் இணைந்து செயற்பட தீர்மானித்து இருக்கின்றோம்.

இதில் மலையக மக்களின் பிரச்சினைகளை ஜெனிவா வரை தான் எடுத்துச் செல்லப் போவதாக அனந்தி சசிதரன் எங்களிடம் தெரிவித்திருக்கின்றார். அவருடைய அந்தக் கருத்தை நாங்கள் வரவேற்பதுடன் அவரது உணர்வுகளையும் நாங்கள் மதிக்கின்றோம். ஆகையினால் தொடர்ந்து அவருடன் கொள்கையளவில் இணங்கிப் செயல்படுவோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட மக்கள் முன்னேற்றப் கழக செயலாளர், மலையக மக்களுக்கும் வடக்கு மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் தேவைகள் வேறாக இருக்கலாம். ஆகையினால் கொள்கை ரீதியாக இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம்.

வாக்குகளைப் பெறுகின்ற பிரதிநிதிகள் மக்களை ஏமாற்றும் நிலை மலையகத்தில் உள்ளது. அந்த நிலை மாற வேண்டும். ஆனால் மற்றவர்களைக் குறை கூறி நாங்கள் அரசியல் செய்யவில்லை.

மலையைக் மக்களுடன் வடகிழக்கு மக்கள் புலம்பெயர் தமிழர்கள் இணைந்து செயற்பட வேண்டும். அதற்கான தேவை இருப்பதால் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். மேலும், மலையக மக்களின் பிரச்சினைகளை ஜெனிவா கொண்டு செல்வேன் என அனந்தி சிசதரன் கூறியிருக்கின்றார். இவ்வாறு மலையக மக்களின் உணர்வுகளை உணர்ந்த தலைவி என்ற ரீதியில் அவரை மலையகதிறகு அழைக்கிறோம் என்றார்.

இச் சந்திப்பின் இறுதியாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக பொது செயலாளர் அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கின்றோம். இதனடிப்படையில் கொள்கை ரீதியாக நாங்கள் இணைந்து பயணிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

மலையக மக்களின் வாழ்வியல் மேம்பட வேண்டும். அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் நலன்கள் பேணப்பட வேண்டும். அதற்கு அரசியல் போராட்டங்களை நடாத்த வேண்டும்.

மலையக மக்களின் பிரச்சினையையும் ஈழத் தமிழர் பிரச்சினையையும் முன்னிறுத்தி தொடர்ந்து இணைந்து செயற்படுவோம் என்றார்.