மைத்திரிக்கு எதிராக சுமந்திரன் எம்.பி. குறுக்கீட்டு மனு!

எல்லை நிர்ணயம் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு நாளை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் இந்த மனுவின் இடைமனுதாரராக இணைந்துகொள்ள அனுமதி கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

எல்லை நிர்ணய அறிக்கை இன்றி, பழைய முறைக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு எம்.ஏ. சுமந்திரன் தனது மனுவின் ஊடாக கோரியுள்ளார்.

2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்தின் திருத்தங்களுக்கு அமைய எல்லை நிர்ணய நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அத்தியாவசியம் என சுமந்திரன் தனது மனுவின் மூலம் நீதிமன்றத்தை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.