இலங்கை மஹிந்த வீட்டின் தனிப்பட்ட சொத்தா? – மங்கள கேள்வி

பிரஜா உரிமையே கேள்விக்குறியாகியுள்ள குற்றச்சாட்டுக்குரிய ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதையிட்டு நான் தனிப்பட்ட ரீதியில் வெட்கப்படுகிறேன் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.

எனது சகோதரர்களில் ஒருவர் அடுத்த ஜனாதிபதி, நான்தான் அடுத்த பிரதமர். இன்னொரு சகோதரர் சபாநாயகர், நான்காவது சகோதரர்தான் நாட்டின்பொருளாதாரத்துக்கு பொறுப்பு என கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்த பின் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் மகன் அடுத்த ஜனாதிபதி. அதன்படி இலங்கை மற்றும் இலங்கையர்கள் ராஜபக்ஷவின் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து என்பதுதான் அவர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அபத்தமான செய்தி எனவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையை சொல்வதானால் மொத்த ராஜபக்ஷ குடும்பமும் ஊழலுக்கும் மக்களை அச்சுறுத்துவதற்கும் பேர் போனது. கோத்தாபயவை ஜனாதிபதியாக்கும் அவர்களது முயற்சி பெரும் தோல்வியை சந்திக்கும். அரசியல் என்பது ஒரு நீண்டதூர ஓட்டம். அது குறுந்தூர ஓட்டமல்ல. நீண்டதூர மரதன் ஓட்டத்தில் முதலில் ஓடுபவர் வெற்றிபெற மாட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.